இன்று விநாயகர் சதுர்த்தி விழா: பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க நேற்று கடைவீதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

Update: 2019-09-01 21:45 GMT
திருவண்ணாமலை,

இந்துக்களின் முக்கிய விழாக்களில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

திருவண்ணாமலையிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்காக அவல், பொரி, பழ வகைகள், சோளம், பூக்கள், பூஜை பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்காக திருவண்ணாமலை கடை வீதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் கடை வீதியில் காணும் இடமெல்லாம் மக்களின் தலையாகவே காட்சியளித்தது.

மேலும் சாலையோரம் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பார்வையிட்டு வாங்கி சென்றனர். அதுமட்டுமின்றி விநாயகர் சிலையை அலங்கரிக்க சாலையோரம் வண்ண அலங்கார குடைகளும் விற்பனை செய்யப்பட்டது. அதை மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்

மேலும் இந்து அமைப்பினர், இளைஞர்கள் சார்பில் ஆண்டு தோறும் அந்தந்த பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் வைப்பதற்காக இளைஞர்கள் தனியாக வாகனம் பிடித்து வந்து சுமார் 3 அடி முதல் 7 அடி வரை உள்ள சிலைகளை வாங்கி சென்றனர். விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்றே திருவண்ணாமலையில் விழா கோலம் பூண்டது.

மேலும் செய்திகள்