விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வேலூரில் பூ விலை ‘கிடு கிடு’ உயர்வு

விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூரில் பூக்களின் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனையானது.

Update: 2019-09-01 21:45 GMT
வேலூர், 

இந்து பண்டிகைகளில் முக்கிய விழாவான விநாயகர்சதுர்த்தி இன்று (திங்கட் கிழமை) கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் இந்துமுன்னணி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் விநாயகர்சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகள் 10 அடிக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டம் முழுவதும் விநாயகர்சிலைகளை வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.

வேலூர் மார்க்கெட்டுக்கு கிருஷ்ணகிரி, ஓசூர், ஆந்திர மாநிலம் குப்பம், வி.கோட்டா போன்ற பகுதிகளில் இருந்தும், அணைக்கட்டு பகுதியில் இருந்தும் பூக்கள் வருகிறது. இன்று விநாயகர்சிலைகளை வைத்து பூஜைசெய்வதால் வேலூர் மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது.

நேற்று முன்தினம் ரூ.500-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி நேற்று ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோன்று ரூ.250-க்கு விற்ற முல்லை, ஜாதி மல்லி ரூ.400-க்கும், ரூ.120-க்கு விற்ற சாமந்தி ரூ.250-க்கும், ரூ.100-க்கு விற்பனையான சம்பங்கி ரூ.300-க் கும், ரூ.100-க்கு விற்ற ரோஜா ரூ.200-க்கும், ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் நேற்று ரூ.800-க்கு விற்பனையானது. பழங்களை பொறுத்தவரையில் விலையில் பெரிய மாற்றம் இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு நேற்று வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்கள் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது. அதேபோன்று விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்வதற்கு தேவையான மக்காச்சோளம் கதிர், வாழைக்கன்றுகள், அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மாலைகள், கம்பு, விலாம்பழம், சிறிய குடைகள் போன்ற பொருட்கள் விற்பனை நேற்று வேலூர் லாங்குபஜாரில் விறுவிறுப்பாக நடந்தது. பூஜைபொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்