மும்பை-கோவா நெடுஞ்சாலையில், அரசு பஸ்சில் திடீர் தீ; 55 பயணிகள் உயிர் தப்பினர்

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் அரசு பஸ்சில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பஸ்சில் இருந்த 55 பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2019-09-01 22:30 GMT
மும்பை,

மும்பையில் இருந்து சிப்லுன் நோக்கி மும்பை-கோவா நெடுஞ்சாலையில் நேற்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 55 பயணிகள் இருந்தனர்.

இந்தநிலையில், மான்காவ் அருகே சென்ற போது பஸ்சின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அடுத்த சில நொடிகளில் திடீரென பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை சாலை ஒரமாக நிறுத்தினார். மேலும் பஸ்சில் இருந்த பயணிகளை அவரசமாக இறங்கும்படி தெரிவித்தார்.

இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். அடுத்த சில நிமிடங்களில் பஸ் முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பஸ்சில் பற்றிய தீயை சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர். எனினும் பஸ் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

சுதாரித்து கொண்டு இறங்கியதால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினார்கள். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பஸ்சில் சென்ற பயணிகள் அனைவரும் மற்றொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்