டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 61,569 பேர் எழுதினர் - 10,005 பேர் எழுதவில்லை
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 61,569 பேர் தேர்வு எழுதினர்.;
வேலூர்,
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் நேற்று குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 71,574 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 245 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வை கண்காணிக்க 22 பறக்கும் படை, 46 நடமாடும் குழுக்கள், 245 மேற்பார்வை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தேர்வு எழுதவந்தவர்கள் அனைவரும் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தவர்களில் 61,569 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 10,005 பேர் தேர்வு எழுதவரவில்லை.
தேர்வு நடந்த மையங்களில் முறைகேடுகள் எதுவும் நடக்காமல் தடுக்க பறக்கும் படையினர், நடமாடும் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட சில தேர்வு மையங்களை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் பார்வையிட்டார்.