வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2019-09-01 22:00 GMT
வாசுதேவநல்லூர்,

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. அங்குள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அமைப்பு செயலாளரும், தென்மண்டல செயலாளருமான மாணிக்கராஜா, மாவட்ட பொறுப்பாளர் பரமசிவ அய்யப்பன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் மகேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாளில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை பெருமையாக கருதுகிறேன். தென்காசி தனி மாவட்டமாக அறிவித்து உள்ளதால் இந்த பகுதி மக்களுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள் விரைவாக கிடைக்கும். தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கவர்னர் பதவி வழங்கியதை வரவேற்கிறேன். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அவர் தமிழ்நாட்டிற்கு தேவையான முதலீடுகளை பெற்று வரவேண்டும். இந்த பகுதியில் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத பாலங்கள், ஓடைகளை மழைக்காலத்திற்கு முன்பே கட்டி முடிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பூலித்தேவனின் வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி தலைமையில் பூலித்தேவனின் குலதெய்வமான உள்ளமுடையார் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

விழாவில் 1000 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோமதி முத்துராணி துரைச்சி குடும்பத்தினர், சிவகுமாரசாமித்துரை, சிபி உள்ளமுடையார் துரைபாண்டியராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன், எஸ்.கே.எம்.சிவக்குமார், பழனிநாடார், சக்தி ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாரதீய ஜனதா கட்சியினர் மாநில துணை தலைவர் சுப.நாகராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ம.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முக்குலத்தோர் புலிப்படையினர் நிறுவன தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தலைமையில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தினர் நிறுவன தலைவர் ஏ.எம்.மூர்த்திதேவர் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக வந்து பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு வந்தவர்களுக்கு ஏ.எம்.மூர்த்திதேவர் அன்னதானம் வழங்கினார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் நயினார் பாண்டியன், அமைப்பு செயலாளர் கொம்பையா பாண்டியன், அவை தலைவர் கருப்பசாமி, விவசாய அணி செயலாளர் வைரமுத்து பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியினர் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன் தலைமையில் மாலை அணிவித்தனர். மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன் தலைமையிலும், அகில இந்திய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தலைவி நாச்சியார் தலைமையிலும், தென்னாடு மக்கள் கட்சியினர் மாநில தலைவர் கணேஷ் தேவர் தலைமையிலும், தமிழ்நாடு தேவர் பேரவையினர் தலைவர் முத்தையா தலைமையிலும், அண்ணா திராவிட கழகத்தினர் தென்மண்டல செயலாளர் தேவேந்திரன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

‘தீ‘ அமைப்பின் மக்கள் தேசிய கட்சி தலைவர் ராஜா மறவன், விடுதலை முக்குலத்தோர் மக்கள் இயக்க தலைவர் விஜிதேவர், நேதாஜி சுபாஷ் சேனை இயக்க தலைவர் மகாராஜன், மாமன்னர் பூலித்தேவன் மக்கள் நல இயக்க தலைவர் பூசைத்துரை, பசும்பொன் தேசிய கழக தலைவர் ஜோதி முத்துராமலிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியராஜா ஆகியோர் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மற்றும் பல்வேறு அமைப்பினர், ஊர் மக்கள் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதையொட்டி நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் போலீசார் அங்காங்கே வாகன சோதனை நடத்தினார்கள். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்