வேப்பூர் அருகே பரபரப்பு, எச்.ராஜாவுக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி
வேப்பூர் அருகே சதுர்த்தி விழாவுக்கு வந்த எச்.ராஜாவுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இருதரப்பினரிடையே அங்கு மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில் கோவில் திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வரும் ஒரு தரப்பினர், விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை வரவேற்று சுவரொட்டிகளை கிராமத்தில் ஒட்டியிருந்தனர். இந்த நிலையில் இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் கிராமத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே நேற்று மாலை எச்.ராஜா அரியநாச்சி கிராமத்திற்கு காரில் வந்தார். இதுபற்றி அறிந்த எதிர்ப்பாளர்கள் மாரியம்மன் கோவில் அருகே கருப்பு கொடிகளுடன் திரண்டனர். இதுபற்றி தகவலறிந்த வேப்பூர் போலீசார் விரைந்து சென்று அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்ததுடன், தங்கள் கிராமத்திற்குள் எச்.ராஜா வரக்கூடாது என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து போலீசார் எச்.ராஜாவிடம் நிலைமையை எடுத்து கூறினர். தொடர்ந்து அவர் அங்கிருந்து காரில் திரும்பி சென்றார்.
இதற்கிடையே எச்.ராஜாவை திருப்பி அனுப்பியதை கண்டித்தும், அவரது வருகைக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கோவில் திருப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருபவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடன் அங்கிருந்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.
தொடர்ந்து கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு பதற்றம் நீடிக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.