திருப்பூரில், ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து 50 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி படுகாயம்; மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

திருப்பூர் ரெயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பனியன் தொழிலாளி நிலை தடுமாறி 50 அடிபள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

Update: 2019-09-01 22:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதிலும், குமரன்ரோடு, காமராஜர்ரோடு, பார்க்ரோடு, ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகள் எப்போது பரபரப்புடனேயே காணப்படும். இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல ரெயில்வே மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது.

அப்போது புஷ்பா ரவுண்டானா பகுதியில் இருந்து மேம்பாலம் வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்பு சுவர்மீது மோதியது. இதில், நிலை தடுமாறிய அந்த நபர் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதை கவனித்தப்படி அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு, அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கீழே விழுந்ததில் அவருடைய தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் வடக்கு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த நபர் திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்த மயில்சாமி (வயது 43) என்ற பனியன் தொழிலாளி என்பது தெரிய வந்தது.

மேலும் செய்திகள்