பேராவூரணி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு

பேராவூரணி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-09-01 22:15 GMT
பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள தில்லங்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி சங்கீதா (வயது32). குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பேராவூரணியில் நேற்று நடந்த மொய் விருந்து விழாவில் கலந்து கொள்வதற்காக சங்கீதா தனது தோழி ஒருவருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். சங்கீதா ஸ்கூட்டரை ஓட்டினார்.

பேராவூரணி அருகே காலகம் கைகாட்டி பகுதியில் ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.

லேசான காயம்

இதில் ஸ்கூட்டரில் சென்ற சங்கீதாவும், அவருடைய தோழியும் நிலைதடுமாறி கீழே விழுந்து, லேசான காயத்துடன் தப்பினர். இதுகுறித்து சங்கீதா பேராவூரணி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பேராவூரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்