திருப்பூரில் பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது; ரூ.24 ஆயிரம் - 5 வாகனங்கள் பறிமுதல்

திருப்பூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 16 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரம் மற்றும் 5 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-09-01 22:30 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் (பொறுப்பு) தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது அங்கு 16 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

இதையடுத்து போலீசார் அவர்கள் அனைவரையும் சுற்றிவளைத்து மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் திருப்பூர் நேரு வீதியை சேர்ந்த கோபிநாத் (வயது 34) உள்பட 16 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.23 ஆயிரத்து 940 மற்றும் ஒரு கார், 4 இருசக்கர வாகனங்கள் ஆகிய 5 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்