கடலூரில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
கடலூரில் குடிப்பழக்கத்தின் காரணமாக யாரும் பெண் கொடுக்காததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர்,
கடலூர் புதுப்பாளையம் இரட்டைபிள்ளையார் கோவில்தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் சங்கர்(வயது 45). தொழிலாளி. திருமணம் ஆகாத இவர் குடிபழக்கம் உடையவர். இந்த நிலையில் சங்கருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி வரன் பார்த்து வந்தனர். ஆனால் சங்கர் மதுகுடிக்கும் பழக்கம் உடையவர் என்பதால் அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த சங்கர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் மின்விசிறி கொக்கியில் தூக்கு போட்டுக்கொண்டார்.
இதில் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி சென்று சங்கரை தூக்கில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சங்கர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சங்கரின் தங்கை ஜெயஸ்ரீ கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.