காரில் இருந்து வீசிய மர்மபெட்டியால் வெடிகுண்டு பீதி

காரில் இருந்து மர்மநபர்கள் வீசிய பெட்டியால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. அதில் பித்தளை பானை இருந்தது. 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-08-31 21:28 GMT
திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் பஸ் நிலையம் அருகே நேற்று கார் ஒன்று வேகமாக சென்றது. திடீரென காரில் இருந்தவர்கள், மர்ம பெட்டி ஒன்றை சாலையில் தூக்கி வீசினர்.

இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், அந்த காரை துரத்தி சென்று மடக்கினர். உடனே காரை நிறுத்தி விட்டு அதில் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 2 பேரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், தாழம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பிடிபட்ட இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள் கேளம்பாக்கத்தை சேர்ந்த சண்முகம் (வயது 53), சென்னை தியாகராயநகரை சேர்ந்த ராமானுஜம் என்பதும், இருவரும் காரில் ‘லிப்ட்’ கேட்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் காரில் இருந்து ரத்தினமங்கலம் பகுதியில் வீசப்பட்ட மர்ம பெட்டியில் வெடிகுண்டு இருக்கலாம் என பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து காஞ்சீபுரத்தில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்த மர்ம பெட்டியை மேலைக்கோட்டையூர் ஏரியில் வைத்து பிரித்து பார்த்தனர்.

அதன் உள்ளே பித்தளை பானை இருந்தது. அதை சுற்றிலும் மரத்தூள்களால் நிரப்பி, சுற்றிலும் தெர்மாக்கோல் வைத்து மூடி, அதன் மேல் டேப்பால் சுற்றப்பட்டு இருந்தது.

காரில் இருந்து தப்பி ஓடியவர்கள், இரிடியம் இருப்பதாக போலி கலசங்கள் செய்து பணமோசடியில் ஈடுபட்டு வரும் மோசடி கும்பலை சேர்ந்தவர்களா?. எதற்காக ரத்தினமங்கலம் பகுதியில் இதை வீசி சென்றனர்?. பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டனரா? என பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்போரூர் அருகே கோவிலில் சுத்தம் செய்தபோது வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் காரில் இருந்து மர்மபெட்டியை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்