காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10 அடி உயரத்திற்கு மேல் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி இல்லை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

விநாயகர் சதுர்த்தியையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10 அடி உயரத்திற்கு மேலான விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்கு வைக்க அனுமதி இல்லை என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தெரிவித்தார்.;

Update: 2019-08-31 21:23 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்ட அரங்கில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

விநாயகர் சிலைகளில் ரசாயன வர்ணங்கள் பூசி இருக்கக்கூடாது. 10 அடிக்கும் அதிக உயரமான சிலைகளை வைத்து வழிபாடு நடத்தக்கூடாது. சிலை வைக்கப்படும் இடத்தில் பந்தல் எரியும் தன்மையுடன் இருக்கக்கூடாது. சிலைக்கு அருகில் வெடி பொருட்களை வைக்கக்கூடாது.

பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் அருகில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது.

சட்ட விரோத மின் இணைப்பு கூடாது. மசூதி, தேவாலயங்கள் அருகில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது. சிலை வைக்கும் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளின் பெயர்கள் அடங்கிய பேனர்களை விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்திற்கு அருகில் வைக்கக்கூடாது. சிலை அருகே 24 மணி நேரமும் இருவர் பாதுகாப்பில் இருக்க வேண்டும். பிறமத வழிபாட்டு தலங்கள் வழியாக ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை. விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த பின்னர் சிலைகளை எடுத்து செல்வதற்கு முன்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த பூக்கள், பொருட்களை அகற்றி விட வேண்டும். மாலை 3 மணிக்குள் ஊர்வலத்தை முடித்து விடவேண்டும் சிலை நிறுவப்படும் இடத்திற்காக ஆர்.டி.ஓ. மற்றும் போலீசாரின் முன்அனுமதி பெற வேண்டும்.

சிலை வைத்த 5 நாட்களுக்குள் கரைக்க வேண்டும். சிலைகளை கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மதுராந்தகம் ஏரி, சதுரங்கப்பட்டிணம்குப்பம், வடபட்டிணம் குப்பம், மாமல்லபுரம் கடற்கரை, கோவளம், கடற்கரை, பல்கலை நகர் கடற்கரை, தழுதாலிகுப்பம், பரமண்கேணி குப்பம், கடலூர் குப்பம், சர்வ தீர்த்தக்குளம் போன்ற இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.

கடந்த ஆண்டு எந்தெந்த இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்ததோ அந்தந்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படும். புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட சட்டம் ஒழுங்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி, வண்டலூர், ஊரப்பாக்கம், மறைமலைநகர் காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள், பொதுமக்கள் மூலம் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்க உள்ளனர். இதனை முன்னிட்டு கூடுவாஞ்சேரியில் விநாயகர் சிலை அமைப்பாளர்கள், போலீசார் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் தலைமை தாங்கினார். கூட்ட முடிவில் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரை அடங்கிய துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்