பள்ளிகொண்டா அருகே சமையல் கியாஸ் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு

பள்ளிகொண்டா அருகே சமையல் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-08-31 22:00 GMT
அணைக்கட்டு,

சென்னையில் உள்ள ஒரு தனியார் கியாஸ் ஏஜென்சியில் இருந்து டேங்கர் லாரி ஒன்று 35 டன் சமையல் கியாஸை நிரப்பிக்கொண்டு ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதனை திருச்சி மாவட்டம் சோபலாபுரத்தை சேர்ந்த சேகர் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அந்த லாரி வேலூரை கடந்து பள்ளிகொண்டா அருகே ஏரிக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஏரிக்கரையில் உள்ள சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் யாரும் லாரியின் அருகில் வராதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் லாரியில் இருந்து கியாஸ் கசிவு ஏதாவது உள்ளதா? என பார்வையிட்டனர். மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக 4 கிரேன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.

மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து 4 கிரேன் எந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணி நடந்தது. அதற்கு வசதியாக வேலூரில் இருந்து ஆம்பூரை நோக்கி சென்ற வாகனங்கள், பெங்களூருவில் இருந்து வேலூர் நோக்கி செல்லும் மறுமார்க்கத்தில் எதிர்திசையில் செல்லுமாறு திருப்பி விடப்பட்டது. ஒரே பாதையில் எதிர் எதிர் திசையில் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி தூக்கி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக விபரீதம் தவிர்க்கப்பட்டதால் போலீசார் நிம்மதி அடைந்தனர். விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்