தூத்துக்குடி மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட வரியை குறைக்காவிட்டால் முற்றுகை போராட்டம்: தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
தூத்துக்குடி மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட வரியை குறைக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகர தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் நடந்தது. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரைப்படி தொகுதிக்கு 10 ஆயிரம் பேரை இளைஞரணியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற இலக்குக்கு ஏற்ப தூத்துக்குடியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இளைஞர் அணியில் சேர்க்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளது. உயர்த்தப்பட்ட வரிகள் அனைத்தையும் மறு சீராய்வு செய்ய வேண்டும். வரியை குறைக்காத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
உள்ளாட்சி தேர்தல் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும். கொசு மருந்து தெளிக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும். வருகிற 15-ந் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் ஏராளமானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.