அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம்,
சென்னைக்கு மிக அருகில் வேகமாக வளர்ந்து வரும் ரெயில் நிலையமாக அரக்கோணம் ரெயில் நிலையம் இருந்து வருகிறது. 8 பிளாட்பாரங்கள் கொண்ட இந்த ரெயில் நிலையம் வழியாக தினமும் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 100-க்கணக்கான மின்சார ரெயில்கள் சென்று வருகிறது.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும் இந்த வழியாக தினமும் ஏராளமான எக்ஸ்பிரஸ், அதிவிரைவு ரெயில்கள் சென்று வருகிறது. அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரக்கோணம் வழியாக ரெயில் பயணத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கல்வி, வேலை, வியாபாரம் சம்பந்தமாக ரெயில்களில் சென்று வருகின்றனர். அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிக அளவில் 1,2-வது பிளாட்பாரம் வழியாக சென்று வருகிறது. பிளாட்பாரத்தின் நீளம் குறைவாக இருந்ததால் 24 பெட்டிகள் கொண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பிளாட்பாரத்திற்குள் வரும் போது 6 பெட்டிகள் வரை பிளாட்பாரத்தை விட்டு வெளியே நின்று வந்தது. அந்த பெட்டிகளில் இருந்து சிறுவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இறங்க சிரமப்பட்டு வந்தனர். இதனால் 24 பெட்டிகளும் பிளாட்பாரத்தில் நிற்கும் வகையில் பிளாட்பாரத்தை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக 1,2-வது பிளாட்பாரத்தை நீட்டித்து பயணிகளின் சிரமத்தை குறைத்தது.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 1,2-வது பிளாட்பாரங்கள் நீட்டிக்கபட்ட பின்னர் பிளாட்பாரத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை. விரிவுபடுத்தப்பட்ட 1,2-வது பிளாட்பாரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை. அந்த பிளாட்பாரத்தில் பயணிகளையும், அவர்கள் கொண்டு வரும் உடைமைகளையும் கண்காணிக்க உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1,2-வது பிளாட்பாரங்கள் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பெட்டிகள் எங்கு நிற்கும் என்று தெரியாமல் பயணிகள் பிளாட்பாரத்தில் ரெயில் வந்தவுடன் அங்கும், இங்குமாக ஓடி பெட்டியை தேடி சிரமப்பட்டு ஏறி செல்கின்றனர். ஆகவே பயணிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் நிற்கும் இடம் குறித்து எளிதில் தெரிந்து கொள்ள பிளாட்பாரத்தில் எலக்ட்ரானிக் தகவல் பலகைகள் பொருத்த வேண்டும்.
1,2-வது பிளாட்பாரங்கள் விரிவுபடுத்தப்பட்டு விட்டதால் முதியவர்கள், நோயாளிகள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் நீண்ட தூரம் நடந்து சென்று ரெயில்களில் ஏற சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பயணிகளின் வசதிக்காக 1,2-வது பிளாட்பாரத்தில் பேட்டரி கார்களை இயக்க வேண்டும். மேலும் 1,2-வது பிளாட்பாரம் முழுவதும் நிழற்குடை ஏற்படுத்த வேண்டும்.
1-வது பிளாட்பாரத்தை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உணவகங்கள் எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் பயணிகள் மற்ற பிளாட்பாரங்களுக்கு நடந்து சென்று உணவுகள் வாங்கி வர வேண்டி உள்ளது. இதனால் முதல் பிளாட்பாரத்தில் புதிய உணவகம் ஒன்றை திறக்க வேண்டும்.
விரிவுபடுத்தப்பட்ட பிளாட்பாரங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ், அதிவிரைவு ரெயில்கள் சென்று வருவதால் அந்த ரெயில்களில் இருந்து இறங்கும் பயணிகள் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வர வேண்டுமானால் நீண்ட தூரம் நடந்து சென்று நடை மேம்பாலத்தில் ஏறி வெளியே வர வேண்டி உள்ளது. எனவே, பயணிகளின் வசதிக்காக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரங்களுக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும், அவ்வாறு இல்லாதபட்சத்தில் பிளாட்பாரங்களில் கூடுதல் நடை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு குறைகள் இருக்கும் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து குறைகளை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கம், பயணிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.