உளுந்தூர்பேட்டை அருகே, குளத்தில் மூழ்கி மாணவன் பலி

உளுந்தூர்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

Update: 2019-08-31 22:00 GMT
உளுந்தூர்பேட்டை, 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடபூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன், தொழிலாளி. இவரது மகன் தேவநாதன் (வயது 7). இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் தேவநாதன், அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் அந்த கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்றான்.

அப்போது சிறுவர்கள் அனைவரும் குளத்தின் கரையோரம் நின்று குளித்துக் கொண்டிருந்தனர். தேவநாதன் மட்டும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவன் தண்ணீரில் மூழ்கினான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தனர்.

உடனே இளைஞர்கள் விரைந்து சென்று குளத்தில் இறங்கி தேடினர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின், தேவநாதனை பிணமாக மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான தேவநாதன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜானகிராமன் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்