கவுந்தப்பாடி அருகே வேன்- மோட்டார்சைக்கிள் மோதல்; புதுமண தம்பதி பலி

கவுந்தப்பாடி அருகே வேனும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் புதுமண தம்பதி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-08-31 23:15 GMT
கவுந்தப்பாடி,

பெருந்துறை அருகே உள்ள நிச்சாம்பாளையம் பிரஸ் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 28). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், கவுந்தப்பாடி அருகே உள்ள ஆவாரங்காட்டூரை சேர்ந்த மஞ்சுளா (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தற்போது மஞ்சுளா 2 மாத கர்ப்பமாக இருந்தார். இந்தநிலையில் பிரகாசும், மஞ்சுளாவும், உறவினரான செம்பருத்தியும் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் ஆவாரங்காட்டூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை பிரகாஷ் ஓட்டினார். மஞ்சுளாவும், செம்பருத்தியும் பின்னால் உட்கார்ந்து இருந்தனர்.

கவுந்தப்பாடி-சிறுவலூர் சாலையில் ஊஞ்சமரத்து பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளும், எதிரே வந்த வேனும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதைப்பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மஞ்சுளா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். பிரகாஷ் நேற்று காலை உயிரிழந்தார். செம்பருத்திக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகிறார்கள்.

விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்