வெளிநாட்டில் செய்யப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

வெளிநாட்டில் செய்யப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தும் மூலம் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2019-08-31 00:13 GMT
திருமங்கலம்,

திருமங்கலம் பயணியர் மாளிகையில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு, அங்கன்வாடி பணியாளர்கள் 337 பேருக்கு செல்போன் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மக்கள் வாழ்வு வளம்பெற வேண்டுமென்று பல்வேறு தொலை நோக்கு திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். ஏற்கனவே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். அதனை தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிசாமி 2-ம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். அப்போது அதில் பங்கேற்ற வெளிநாட்டினர் நீங்களும் எங்கள் நாட்டிற்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க தான் முதல்-அமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தில் முதல்-அமைச்சராக இருந்தபோது இதேபோல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு குஜராத்தில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்தார். வெளிநாட்டினர் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர்.

தொழில்துறை, மருத்துவத்துறை, பால்வளத்துறை, தகவல் தொழில்நுட்பதுறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முதலீட்டாளர்களை கவரவும், புதுமைகளை புகுத்தவும் வெளிநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதில் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த அதிக அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இதில் நானும், துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்கிறோம். நாளை(இன்று) இரவு சென்னையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து நியூயார்க் செல்கிறோம். அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்து கொண்டு 10-ந்தேதி சென்னை வருகிறோம். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்