தொழிலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவு

விருதுநகர் மாவட்டம் மாஞ்சோலையில் தொழிலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2019-08-30 23:49 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாஞ்சோலை காலனியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 42). இவரது மகன் முருகன் (24). கம்பி கட்டும் தொழிலாளி. முருகனுக்கு அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகளை பெண் கேட்டு கடந்த 2016-ம் ஆண்டு அவரும் முத்தம்மாளும் சென்றுள்ளனர்.இது தொடர்பாக கணேசன், முத்தம்மாள் அண்ணன் சீமானிடம் முருகனுக்கு பெண் கேட்டு வந்துள்ளனர் பெண் தரலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு சீமான் பெண் தர வேண்டாம் என கூறியுள்ளார்.

இதுபற்றி அறிந்த முருகன் மற்றும் முத்தம்மாள் சீமானிடம் சென்று தகராறு செய்துள்ளனர். இதுதொடர்பாக தாய்மாமன் சீமானுக்கும் மருமகன் முருகனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது

இந்நிலையில் கடந்த 20.2.2016 அன்று முருகனை சீமானும் அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரும் கம்பால் தாக்கிஉள்ளனர். இதில் படுகாயமடைந்த முருகன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீமான், இசக்கிமுத்து ஆகிய 2 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரி, சீமான் இசக்கிமுத்து ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இருவருக்கும் தலா ரூ.5,000-ம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்