ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அமைச்சரவையில் இடம்பெற்று இருப்பேன் - புதுக்கோட்டையில் கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், நான் அமைச்சரவையில் இடம்பெற்று இருப்பேன் என புதுக்கோட்டையில் கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த திரைப்பட நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு சார்பாக வெளிநாடு பயணம் மேற்கொண்டு உள்ள தமிழக முதல்-அமைச்சரின் பயணம் குறித்து விமர்சனங்கள் செய்வது தவறு. தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்காக தான் முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு உள்ளார். முதலீடு வரும், வராமலும் இருக்கும். தமிழக முதல்-அமைச்சரும், ஸ்டாலினும் வெளிநாட்டு பயணம் குறித்து ஒருவருக்கு ஒருவர் விமர்சனம் செய்து கொள்வது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல.
சசிகலா மற்றும் தினகரன் அ.தி.மு.க.வில் சேருவதற்கு இடம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். இன்று உள்ள நிலைப்பாட்டை அவர் கூறுகிறார். ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் நிலைப்பாட்டில் நாளை மாற்றம் ஏற்படலாம்.
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், நான் அமைச்சரவையில் இடம்பெற்று இருப்பேன். அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை நீக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
வேதாரண்யத்தில் நடந்த வன்முறையில் ஒரு தரப்பினர் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆயுதங்கள் ஏந்தி வந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் எனது தலைமையில் வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நடிகர் விஷாலுக்கும், ஐசரி கணேஷுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட ஈகோ பிரச்சினையால் நடிகர் சங்க கட்டிட பணி பாதியில் நின்று உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு 2 வார காலத்திற்குள் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.