பார்வையற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு

பார்வையற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-08-30 22:15 GMT
திருவண்ணாமலை,

வந்தவாசி தாலுகா பெரணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 52), தொழிலாளி. இவர், கடந்த 2013-ம் ஆண்டு மோரக்கனியனூர் பகுதியை சேர்ந்த பார்வைற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அர்ச்சனா ஆஜரானார்.

இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்து நீதிபதி விஜயராணி தீர்ப்பு கூறினார். அதில், பார்வையற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஏழுமலைக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் இதில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஏழுமலையை போலீசார் பலத்த காவலுடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

மேலும் செய்திகள்