அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பயன்பாட்டிற்காக பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 100 மேஜைகள், பெஞ்சுகள் வாங்கப்பட்டன. இவற்றை மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் தீர்த்தலிங்கம் வரவேற்றார். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளின் பயன்பாட்டிற்காக மேஜைகள் மற்றும் பெஞ்சுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் மற்றும் அனைத்து பணியிடங்களும் நிரந்தர பணியாளர்களை கொண்டு 3 மாத காலத்திற்குள் நிரப்ப முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வருகிற 4-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பெறப்படும். அதைத்தொடர்ந்து 3 மாத காலத்தில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.
தமிழகத்திலேயே கல்லூரி தொடங்கி 2 ஆண்டுகளில் 19 பாடப்பிரிவுகளில் 1,900 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ள ஒரே கல்லூரி பாலக்கோடு எம்.ஜி.ஆர். அரசு கலைஅறிவியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரிக்கு ரூ.10 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கல்லூரிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்களை மாணவ-மாணவிகள் நல்லமுறையில் பயன்படுத்தி கொண்டு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
முன்னதாக காரிமங்கலம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 30 வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து பெரியாம்பட்டியில் நடந்த முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாமில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். மேலும் பாலக்கோடு அருகே உள்ள சாமனூரில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அமைச்சர் கடனுதவிகளை வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், உதவி கலெக்டர் சிவன்அருள் கல்லூரி கல்வி இணை இயக்குனர் சகுந்தலா, கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சங்கர், தாசில்தார் வெங்கடேசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, சங்கர், சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.