வசாயில் ‘‘பப்ஜி’’ விளையாடிய வாலிபர் குளத்தில் தவறி விழுந்து பலி தாயும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

‘பப்ஜி’ விளையாடிய வாலிபர் குளத்தில் தவறி விழுந்து பலியானார். இதுபற்றி அறிந்த அவரது தாய் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-30 22:27 GMT
வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு தானிவ் பாக் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது21). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள குளம் அருகே போடப்பட்டு இருந்த திண்ணையில் அமர்ந்து செல்போனில் பப்ஜி விளையாடி கொண்டிருந் தார். அப்போது அவருக்கு செல்போனில் தாயிடம் இருந்து அழைப்பு வந்தது.

அப்போது அவர் வீட்டிற்கு வரும்படி தெரிவித்தார். இதற்கு ஆகாஷ் சிறிது நேரத்தில் வருவதாக கூறி அழைப்பை துண்டித்து விட்டார்.

ஆனால் ஆகாஷ் மறுநாள் காலை வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது தாய் ஆகாசின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து தேடும்படி கூறினார்.

ஆனால் எங்கும் கிடைக்காமல் போனதால் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு நடத்திய விசாரணையில் அது காணாமல் போன ஆகாஷ் என்பது தெரியவந்தது.

அவர் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த போது குளத்தில் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த அவரது தாய் அங்கு வந்து குளத்தில் மிதந்த தனது மகனின் உடலை கண்டு கதறி அழுதார். அப்போது திடீரென அவர் குளத்தில் குதித்தார். இதனை கண்ட அங்கிருந்த தீயணைப்பு படையினர் உடனடியாக குளத்தில் குதித்து அவரை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் ஆகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்