சுகாதார துறை மூலம் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் மருத்துவ முகாம்கள் - கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் சுகாதார துறை மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டு உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறியதாவது;-
தூத்துக்குடி மாவட்டத்தில் 70 குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் உள்ளன. இவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி உள்ளனர். இங்கு வங்கி கணக்கு தொடங்கப்படாத 992 குழந்தைகளுக்கு, உடனடியாக வங்கி கணக்கு தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளின் முகவரி உள்ளிட்டவைகளின் பதிவேடுகள் முழுமையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் சுகாதார துறையின் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு இல்ல குழந்தைகள் மட்டுமின்றி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் நல்ல தொடுதல், தீய தொடுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகள் அதிக நேரம் பள்ளிக்கூடத்தில் தான் இருக்கிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதி, பள்ளி விடுதிகள் உள்ளிட்டவைகள் அனைத்தையும் முறையாக பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி, குழந்தைகள் பாதுகாப்பு மாவட்ட திட்ட அலுவலர் ஜோதிகுமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.