“கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க ஏற்பாடு” அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2019-08-30 22:15 GMT
கோவில்பட்டி, 

முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தில் குளங்கள், கண்மாய்கள், ஓடைகள் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடியில் புதிய தொழில்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அவரது வழியில் ஆட்சி செய்யும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆண்டு 2-வது உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார்.

மேலும் உலக தொழில் முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க செய்யும் வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் லண்டனுக்கு சென்ற இரவிலும்கூட தமிழ் ஆர்வலர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு மறுநாள் காலையிலே மருத்துவ துறையில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்-அமைச்சர் கையெழுத்திட்டு உள்ளார். தொடர்ந்து அவர் அமெரிக்கா, துபாய், ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, உலக தொழில் முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

தி.மு.க.வின் ஆட்சிக்காலத்தில் செய்ய தவறிய திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க.வின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்படுகிறது. இதனை பொறுக்க முடியாமல், முதல்-அமைச்சரின் பயணத்தை கொச்சைப்படுத்தி பேசுவது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழகல்ல.

தமிழகத்தின் பிக்பாஸ் அ.தி.மு.க.தான். கடந்த 1979-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அத்திவரதர் தரிசனம் நடந்தது. தற்போதும் அ.தி.மு.க. ஆட்சியின்போதுதான் அத்திவரதர் தரிசனம் நடந்தது. முல்லைப்பெரியாறு அணை, காவிரி நதி நீர் பங்கீடு, ஜல்லிக்கட்டு போன்றவற்றில் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை மீட்டது அ.தி.மு.க.தான்.

அ.தி.மு.க.வின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வேறு முடிவை எடுத்தாலும், தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற வைத்தனர். டி.டி.வி.தினகரன் போன்றவர்களை அடையாளமே இல்லாமல் செய்தனர்.

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கு புவிசார் குறியீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. புதுச்சேரியில் பால் விலையை உயர்த்தியபோது, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதில் இருந்து அவரது அரசியல் தெரிகிறது. சமீபத்தில் நடந்த மத்திய அரசு பணி தேர்வுகளை தமிழில் எழுதுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்ததை நல்லக்கண்ணு போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்