நாகர்கோவிலில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
நாகர்கோவிலில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு அரசியல் கட்சியினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாகர்கோவில்,
தமிழ் திரையுலகில் தனது நடிப்பாலும், கருத்துக்களாலும் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இவருடைய சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். அவருக்கு நாகர்கோவில் மணிமேடை பகுதியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் மணிமேடையில் உள்ள அவருடைய சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் நிர்வாகிகள் சந்துரு, ஜெயசீலன், ஜெயகோபால், பொன்.சுந்தர்நாத், இ.என்.சங்கர், ஷாநவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. எச்.வசந்தகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நிர்வாகிகள் அய்யப்பன், முருகேசன், செல்லத்துரை, தவசிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலைவாணர் நற்பணி இயக்கம் சார்பில் என்.எஸ்.கிருஷ்ணனின் பேரன் கிருஷ்ணசந்திரன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட திராவிட கழகம் சார்பில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் தயாளன் தலைமை தாங்கினார். நெல்லை மண்டல செயலாளர் வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார்.
இதில் நிர்வாகிகள் பொன்னுராசன், கருணாநிதி, பெரியார் தாஸ், சேகர், ராஜகோபால், தாமஸ், ஜோஸ் கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.