செஞ்சி அருகே, கிணற்றுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது - நண்பருடன் புதுமாப்பிள்ளை பலி
செஞ்சி அருகே 75 அடி ஆழ கிணற்றுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் நண்பருடன் புதுமாப்பிள்ளை பலியானார். தனது திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுக்க சென்ற இடத்தில் இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சிறுவாலை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் பிரதீப்ராஜ் (வயது 27). இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், வருகிற 16-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர், சிறுவாலை கிராமத்தை சேர்ந்த தனது நண்பர்களான காத்தவராயன் மகன் மாமலைவாசன்(25), அலகுநாதன் மகன் ரமேஷ்(25) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆலம்பூண்டிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கனக்கன்குப்பத்தில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க 3 பேரும் சென்றனர். அப்போது, மோட்டார் சைக்கிளை பிரதீப்ராஜ் ஓட்டினார்.
இரவு தேவதானம்பேட்டையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த 75 அடி ஆழமுள்ள தரை கிணற்றின் உள்ளே பாய்ந்தது. இதில் பிரதீப்ராஜ், மாமலைவாசன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். ஆனால் ரமேஷ் மட்டும் கிணற்றில் பக்கவாட்டில் இருந்த புதருக்குள் சிக்கிக்கொண்டார். தொடர்ந்து அவர் லேசான காயங்களுடன் மெல்ல வெளியே வந்தார்.
பின்னர் தனது கிராமத்திற்கு சென்ற அவர், தனது நண்பர்களுக்கு நடந்த துயரம் குறித்து நேற்று காலை அவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கிணற்றை சுற்றிலும் புதர் மண்டி இருந்ததால் அவர்களை மீட்கும் முயற்சி பலனளிக்கவில்லை.
இதற்கிடையே சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையிலான போலீசார் மற்றும் செஞ்சி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சசுபதி தலைமையில் விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி பிரதீப்ராஜ், மாமலைவாசன் ஆகியோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பலத்த காயமடைந்த இருவரும், தண்ணீரில் மூழ்கி பலியாகி இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடலை பார்த்ததும், அங்கிருந்த அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதையடுத்து அவர்களது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருகிற 16-ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் பிரதீப்ராஜ் தனது நண்பருடன் சேர்ந்து பலியாகி இருக்கும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.