உளுந்தூர்பேட்டை அருகே பயங்கரம், கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி அடித்துக் கொலை

உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதலை கண்டித்த மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டார். மின்விசிறியில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-30 23:15 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தவமணி(24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தவமணி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் இறந்தது பற்றி மணிகண்டனிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தவமணியை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த எனது மனைவி தவமணி, கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி என்னை கண்டித்தார். ஆனால் கள்ளக்காதலை கைவிட விருப்பம் இல்லாத நான், தினசரி அவருடன் தகராறு செய்து வந்தேன்.

இதற்கிடையே மோட்டார் சைக்கிள் வாங்க விரும்பிய நான், அதற்கான பணத்தை பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி நேற்று மாலை (அதாவது நேற்று முன்தினம்) தவமணியிடம் கூறினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். மேலும் அவர் என்னிடம் ஊர்க்காரர்கள் உங்களது கள்ளக்காதல் பற்றி பேசுவதாகவும், அதனால் கள்ளக்காதலை கைவிடும்படியும் கூறி என்னை கண்டித்தார்.

இதில் ஆத்திரமடைந்த நான் தவமணியை கையால் தாக்கி, அவரது தலையை வீட்டில் இருந்த கட்டை மீது மோதினேன். இதில் தலையில் காயமடைந்து மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.

இதனால் அச்சமடைந்த நான் அவரது கழுத்தில் சேலையை கட்டி, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினேன். ஆனால் போலீசாரின் விசாரணையில் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

கள்ளக்காதலை கண்டித்த மனைவியை கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்