167 மையங்களில் நாளை நடைபெறும், குரூப்-4 தேர்வை 48 ஆயிரம் பேர் எழுதுகின்றனர் - 16 பறக்கும் படைகள் அமைப்பு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 167 மையங்களில் நாளை நடைபெறும் குரூப்-4 தேர்வை 48 ஆயிரத்து 878 பேர் எழுதுகின்றனர். இதை கண்காணிக்க 16 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்-4 பணிக்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் அந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.
மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலர் அறிவுச்செல்வம் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் குரூப்-4 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
குரூப்-4 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 167 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 48 ஆயிரத்து 878 பேர் தேர்வு எழுத இருக்கின்றனர். இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. எனவே, காலை 9.30 மணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் 9.50 மணிக்கு விண்ணப்பதாரரின் புகைப்படம் ஒட்டிய விடைத்தாள் வழங்கப்பட்டு, சரிபார்க்கப்படும். அதில் முரண்பாடுகள் இருந்தால் அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம். உடனே மாற்று ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் செல்போன், மின்னணு கைக்கெடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்டவற்றை எடுத்து வர அனுமதி கிடையாது. தேர்வு மையத்தில் விதிகளை மீறும் நபர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்.
இந்த தேர்வை கண்காணிக்க துணை கலெக்டர்கள் தலைமையில் 16 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் சோதனை நடத்துவார்கள். மேலும் வீடியோ கேமரா மூலம் அனைத்து மையங்களிலும் தேர்வு பதிவு செய்யப்படுகிறது. அதோடு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் தேர்வு மையங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எளிதாக சென்று வரும் வகையில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.