கள்ளிமந்தையம் பகுதியில் ‘பர்ரி’ ரக பேரீச்சை சாகுபடி

கள்ளிமந்தையம் அருகே பர்ரி பேரீச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-08-30 22:30 GMT
சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் பகுதியில் காய்கறி, புகையிலை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் மாறிவரும் பருவநிலை, நீர்ப்பற்றாக்குறை, போதிய விலையின்மை ஆகிய காரணங்களால் விவசாயிகள் பிற பயிர்சாகுபடிக்கு மாறி வருகின்றனர். அந்தவகையில் கள்ளிமந்தையம் கூத்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான கேசவன் (வயது 62) ‘பர்ரி’ ரக பேரீச்சையை சாகுபடி செய்து, விளைச்சலில் சாதனையும் படைத்துள்ளார். இந்த சாகுபடி முறைகள் குறித்து அவர் கூறியதாவது:-

என் குடும்பம் விவசாயத்தை பின்னணியாக கொண்டதால், பணி ஓய்வுக்கு பிறகு முழுமையாக விவசாயம் செய்ய விரும்பினேன். எனவே ‘பர்ரி’ ரக பேரீச்சை சாகுபடி செய்ய முடிவெடுத்து, தர்மபுரி மாவட்டம் அரியகுளத்தில் இருந்து மரக்கன்று வாங்கி வந்து நடவு செய்தேன்.

முதல் ஆண்டு ஒரு கன்றுக்கு ஒரு நாள் விட்டு 25 லிட்டர் தண்ணீரும், 2-ம் ஆண்டு 3 நாட்கள் விட்டு 50 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். 3-ம் ஆண்டு விளைச்சல் தொடங்கியதும் கன்றுக்கு 3 நாள் விட்டு 100 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இது பனைமரத்தை போன்றே 3 ஆண்டுகளில் 6 அடி வரை வளரும். பின்னர் போக போக 50 ஆண்டுக்கு பின்னர் மரத்தின் உயரம் சுமார் 50 அடி வரை வளரும். ஆயுள் காலம் 75 ஆண்டுகளாகும். மரத்தின் உயரம் 10 அடிக்கும் மிகாமல் இருப்பதால் அறுவடையும் எளிதாக இருக்கும். பொதுவாக பேரீச்சை நீரின்றி விளைச்சல் கொடுக்கக்கூடியது. ஆனால் ‘பர்ரி’ ரக பேரீச்சையில் அதிக விளைச்சல் பெற தண்ணீர் அவசியம்.

அதையடுத்து மகரந்த சேர்க்கை சரியாக நடைபெற்று அதிக விளைச்சல் பெற முடியும். மகரந்த சேர்க்கை முடிந்த ஒரு மாதத்தில் காய்கள் காய்க்கும். இது பனை மரங்கள் காய்ப்பது போல ஜனவரி மாதம் பூக்கள் பூக்கத் தொடங்கி, ஜூன் மாதங்களில் விளைச்சல் கொடுக்கும். இவ்வகை மரங்களுக்கு செயற்கை மருந்து தெளிக்க தேவையில்லை. முழுக்க முழுக்க மண்புழு உரம், பஞ்சகவ்யம், பசுந்தாள் உரம் ஈட்டால் போதுமானது. இதனால் அதன் சுவையும் அதிகரிக்கும்.

பிஞ்சுகள் விட்ட 4 மாதங்களில் பழுக்க தொடங்கும். ஒரு மரத்தில் 5-7 குலைகள் இருக்கும். குலைக்கு 10 கிலோ பழங்கள் இருக்கும். மற்ற வகை பேரீச்சையில் பழங்களை காய வைக்க வேண்டும். ஆனால் இந்த மரங்களில் காய்க்கும் பழங்களை அப்படியே சாப்பிடலாம். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சுவைக்கலாம். சில்லறை விலையில் கிலோ ரூ.200-க்கும், மொத்த விலையில் கிலோ ரூ.150-க்கும் ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல், மதுரை உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்