குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு: மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கக்கோரி விவசாயிகள் வாக்குவாதம்
குறைதீர்க்கும் கூட்டத்தின்போது, மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கக்கோரி விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்.;
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் கவுதம், மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லின் துக்காராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 114 விவசாயிகளுக்கு கிஷான் கடன் அட்டை மற்றும் 3 விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் பேசும்போது, ‘மாவட்டத்தில் மின்வாரியம் சார்பில், எந்த அறிவிப்பும் கொடுக்காமல், காப்பு வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலத்தில் கட்டவில்லை என்று கூறி அபராதம் வசூல் செய்துள்ளனர். அந்த வகையில் மின்நுகர்வோரிடம், ரூ.48 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நுகர்வோரிடம் கூடுதலாக வசூலித்த அபராத தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கலெக்டர் விளக்கம் கேட்டார். தொடர்ந்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார்.
பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி சீனிராஜ் பேசும்போது, ‘பள்ளப்பட்டி, அடைக்கம்பட்டி, கண்டமனூர், தேக்கம்பட்டி பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் ஆவின் நிர்வாகத்தின் முகவர்கள் அரசு நிர்ணயித்த கொள்முதல் தொகையை வழங்குவது இல்லை. பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதிகளுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.1 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து ஆவின் நிர்வாக அலுவலர்களிடம் கலெக்டர் விளக்கம் கேட்டார். அரசு விலை உயர்வு அறிவிக்கும் முன்பு எவ்வளவு தொகைக்கு பால் கொள்முதல் செய்யப்பட்டது? தற்போது எவ்வளவு தொகைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது? என்பது குறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்க ஆவின் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தின்போது மலை மாடுகள் வளர்க்கும் விவசாயிகள் பலர், தங்களுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசினர். அப்போது விவசாயிகள், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அருகில் திரண்டு வந்து மேய்ச்சல் அனுமதிச்சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேய்ச்சல் அனுமதிச்சீட்டு பெறுவதற்கு புதுப்புது கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், அனுமதிச்சீட்டு தராதபட்சத்தில் மாடுகளை அரசே விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதற்கு வனத்துறை அதிகாரிகள் அளித்த பதில்களை விவசாயிகள் ஏற்கவில்லை. இதையடுத்து இந்த பிரச்சினை தொடர்பாக மட்டுமே விவாதித்து தீர்வு காண்பதற்காக கலெக்டர், மாவட்ட வன அலுவலர், வன உயிரின காப்பாளர் ஆகியோர் பங்கேற்கும் வகையில் ஒரு வார காலத்துக்குள் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்று கலெக்டர் வாக்குறுதி அறித்து அவர்களை சமரசம் செய்தார்.
மேலும் இக்கூட்டத்தின் போது, ‘கால்நடைகளுக்கான உலர் தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தட்டுப்பாடு இன்றி தீவனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை வசதி கிடைக்கும் வகையில், கால்நடைகளுக்கான நடமாடும் மருத்துவ சிகிச்சை குழு அமைக்க வேண்டும்’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். அதற்கு, கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளதாக கலெக்டர் பதில் அளித்தார்.
இதில், சீர்மரபினர் நலச்சங்கத்தின் விவசாயிகள் சங்க பிரிவு மாநில தலைவர் செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்த திட்டத்தால் அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும். வருசநாடு பகுதியில் பழங்குடி மக்களை வனத்தை விட்டு வெளியேற்றக்கூடாது. அரபுநாடுகளில் செயற்கை மழையை உருவாக்குவது போல், நிலத்தடி நீரை நாம் பாதுகாக்கலாம். எனவே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செயற்கை மழை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜவஹரிபாய் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.