லோயர்கேம்ப்பில், குடிநீர் தொட்டி பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்படுமா?
லோயர்கேம்ப் குடிநீரேற்று நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டி பகுதியில் தடுப்பு கம்பிவேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.;
கூடலூர்,
கூடலூர், கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளுக்கு லோயர்கேம்பில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக லோயர்கேம்ப் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2007-08-ம் ஆண்டு முதல் கோம்பை, பண்ணைப்புரம், காமயகவுண்டன்பட்டி ஆகிய 3 பேரூராட்சிகளுக்கும், நாராயணத்தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும் 3 புதிய நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டன.
அதன் மூலம் அந்தந்த பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக குடிநீரேற்று சுத்திகரிப்பு நிலையங்கள் அருகே ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக தரைமட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு குடிநீர் சேமிக்கப்பட்டு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த தொட்டிகள் திறந்த நிலையில் உள்ளன. அந்த தொட்டிகளில் யாராவது விழுந்து உயிர் பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த பகுதிகளில் மேயும் கால்நடைகளும் தவறி உள்ளே விழுந்து விடும் அபாயம் உள்ளது.
எனவே அந்த குடிநீர் தொட்டிகள் உள்ள பகுதிக்கு யாரும் செல்ல முடியாதபடி தடுப்பு கம்பி வேலி அமைக்க குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காவலாளியை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.