தமிழ் மொழியை நேசிப்பது தாயை நேசிப்பதற்கு ஒப்பானது ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேச்சு

தமிழ் மொழியை நேசிப்பது தாயை நேசிப்பதற்கு ஒப்பானது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேசினார்.

Update: 2019-08-30 23:00 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை தமிழ் சங்கம் சார்பில் “தமிழுக்காக வாழ்வோம் தமிழாய் வாழ்வோம்“ என்ற தலைப்பில் மயிலாடுதுறையில் சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் சிவலிங்கம் வரவேற்றார். நிறுவன தலைவர் பவுல்ராஜ், தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை மாநில தலைவர் குணசேகரன், ஏ.வி.சி. கல்லூரி தமிழ்த்துறை தலைவர் தமிழ்வேலு, மூத்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சென்னை அறிவியல் நகரம் அமைப்பின் துணை தலைவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சகாயம், தமிழ் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

இந்தியா, கிராமங்களின் தேசம். கிராமத்தில் பிறந்ததால் நான் பெருமைபடுகிறேன். விவசாயி மகன் என்ற பெருமையும் எனக்கு உண்டு. நான் ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் என்ற பெருமையும், ஒரு நேர்மையான அலுவலர் என்ற கர்வமும் எனக்கு உண்டு. இத்தனையும் தாண்டி தமிழ் மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த தமிழர் என்ற பெருமை என்றைக்கும் எனக்கு உண்டு.

எந்த மொழியையும் கற்றுக்கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் தமிழர்கள். இந்தி மொழி உள்பட அனைத்து மொழிகளையும் கற்று கொள்ளும் திறன் படைத்தவர்கள். தேவைக்கேற்ப அவர்கள் கற்று கொள்வார்கள். அதே நேரத்தில் எதையும் திணிப்பது இனிக்காது.

டெல்லியில் ஐ.ஏ.எஸ். நேர்முக தேர்வின்போது என்னிடம், எந்த மொழியை இந்திய ஆட்சி மொழியாக வைத்துக்கொள்ளலாம் என்று கேட்டனர். அதற்கு நான் தயக்கமில்லாமல் இலக்கிய, இலக்கண பெருமை கொண்டிருக்கிற, இன்றைக்கும் உயிர்த்துடிப்போடு இருக்கக்கூடிய உலகின் மூத்த மொழியான என் தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக வைத்து கொள்ளலாம் என்று பதில் கூறினேன்.

ஐ.ஏ.எஸ் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறபோது இந்த நாட்டின் ஆட்சிமொழியாக எதை வைக்கலாம் என்று கேட்டபோது என்னை அறியாமலே தமிழை வைக்கலாம் என்று சொன்னதற்கு காரணம் என்ன தெரியுமா? எங்கள் சொல்லுக்குள்ளும், உள்ளுக்குள்ளும் தமிழ் தான் இருக்கிறது என்பது தான் உண்மை. உலகத்தில் உள்ள மொழிகளை வரிசைப்படுத்தும்போது தமிழை பண்பாட்டு மொழி என்று கூறியுள்ளனர். ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி அறிந்த பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்கிறார்.

நம்முடைய பெருமைகளை நம்மை விட மேலை நாட்டவர்கள் உணர்ந்துள்ளனர். தனித்து இயங்குகிற கூட்டமைப்பு உடையது தமிழ்மொழி. சம்பிரதாயங்களாக மரபு வழியாக நாம் நடத்தக்கூடிய தமிழ் விழாக்களில் இருந்து மாறுபட்டு தமிழர்களின் உளவியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க கூடிய நிலையிலே நாம் இருக்க வேண்டும். ஆங்கிலம் தேவை என்று எனக்கு தெரியும். அதே நேரத்தில் ஆங்கில மோகத்தை தவிர்க்க வேண்டும். ஆங்கில ஆற்றலை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். ஆங்கில ஆற்றலை வளர்த்து கொண்டால் மோகம் போய்விடும்.

தமிழ் மொழியை நேசிப்பது என் தாயை நேசிப்பதற்கு ஒப்பானது. இது தான் நெறி. எனவே திட்டமிடுங்கள். திட்டமிட்டு தமிழ் பயன்பாட்டு தளத்தை விரிவாக்குங்கள். நாம் பெயர் வைப்பதில் இருந்து, உறவுகளை அழைப்பதில் இருந்து, நம்முடைய உரையாடல்களில் இருந்து அன்னிய மொழியை அகற்றுவதில் இருந்து, நாம் கையெழுத்து போடுவதில் இருந்து, நம்முடைய கல்வி தளங்களுக்கு அதை கொண்டு செல்வதில் இருந்து, நீதிமன்றங்களுக்கு அலுவலக பயன்பாடுகளுக்கு கொண்டு செல்வதில் இருந்து திட்டமிட்டு செயலாற்றுவது தான் தமிழ்தாய்க்கு செய்யும் தொண்டு ஆகும்.

அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்க வேண்டும். அதற்கு இன்றே திட்டமிட்டுசெயல்பட வேண்டும். அப்போதுதான் நாம் தமிழை வாழ்விக்கக்கூடிய மகத்தான பணியை செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிகளை முத்துக்கனியன் தொகுத்து வழங்கினார்.

மேலும் செய்திகள்