சாராய வியாபாரி, தடுப்பு காவல் சட்டத்தில் கைது

பண்ருட்டியை சேர்ந்த சாராய வியாபாரியை தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-08-29 22:45 GMT
கடலூர்,

பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் மது கடத்தலை தடுக்கும் பொருட்டு பாலூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டை ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்த வீரசேகரன்(வயது 28) என்பவர் அந்த வழியாக மொபட்டில் சாக்குமூட்டையுடன் வந்தார். சந்தேகத்தின் பேரில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, சாக்குமூட்டையில் 2 பைகளில் 110 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மொபட்டுடன் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே வீரசேகரன் மீது பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவில் 4 சாராய கடத்தல் வழக்குகள் உள்ளன. இதனால் அவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, வீரசேகரனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவுப்படி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வீரசேகரனை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்