கிள்ளையில், வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற நண்பர் கைது
கிள்ளையில் வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர். கோவில் திருவிழாவில் டிஜிட்டல் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கொன்றது அம்பலமானது.
பரங்கிப்பேட்டை,
சிதம்பரம் அருகே கிள்ளை வடக்குமெயின்ரோட்டை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் தினேஷ்(வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா மகன் பாபு (19), பழனிவேல் மகன்கள் தமிழ்செல்வன், தாமரைசெல்வன் ஆகியோர் நண்பர்கள் ஆவர். இவர்கள் நேற்று முன்தினம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் உள்ளிட்ட 3 பேரும் ஒன்று சேர்ந்து தினேசை தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் தமிழ்செல்வன் உள்ளிட்ட 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் 3 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தினேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பாபு, எம்.ஜி.ஆர்.திட்டு பகுதியில் மறைந்து இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும், பாபு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். போலீசார் துரத்திச்சென்று பாபுவை மடக்கிபிடித்து கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கிள்ளையில் நேற்று முன்தினம் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் டிஜிட்டல் பேனர் வைப்பது தொடர்பாக தினேசுக்கும், பாபு, தமிழ்செல்வன், தாமரைசெல்வன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் தினேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.