கர்நாடகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி எடியூரப்பா தகவல்

கர்நாடகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எடியூரப்பா கூறினார்.

Update: 2019-08-29 21:30 GMT
பெங்களூரு,

கர்நாடக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் தேசிய விளையாட்டு தினம் மற்றும் பலமான பாரதம் எனும் நிகழ்ச்சி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடை பெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

விளையாட்டு வீரர்களுக்கு எங்கள் அரசு ஊக்கம் அளித்து வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி அளிப்பது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஆரோக்கியமான உடலில் தூய்மையான மனது இருக்கும். நாம் எவ்வளவு நெருக்கடியில் இருந்தாலும் 24 மணி நேரத்தில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு என்று சிறிது நேரத்தை ஒதுக்கி அதில் கவனம் செலுத்த வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி, நமது நாட்டின் பாரம்பரியதை பரப்பும் பணியை மேற்கொள்கிறார். அவருடன் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டியது அவசியம். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

முன்னதாக புகழ் பெற்ற ஆக்கி வீரர் தியான்சந்த்தின் உருவப் படத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த விழாவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்