குப்பாண்டம்பாளையம்-கருவல்வாடிபுதூர் இடையே பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

குப்பாண்டம்பாளையம்-கருவல்வாடிபுதூர் இடையே பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-08-29 22:45 GMT
ஈரோடு, 

கோபி அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம். கோபி அருகே உள்ள அம்மாபாளையம், மேவானி, அந்தியூர், குப்பாண்டம்பாளையம், கீழ்வானி, அத்தாணி போன்ற கிராமங்களில் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் இங்கு தற்போது 3 கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அம்மாபாளையம், குப்பாண்டம்பாளையம் இடையே செல்லும் பவானி ஆறு இயற்கையாகவே இருபுறமும் கரைகள் உயர்ந்து நீர் தேக்கி வைக்க உகந்த பகுதி ஆகும். எனவே முதல்-அமைச்சர் அறிவித்துள்ள தடுப்பணையை, அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டம்பாளையம் -கருவல்வாடிபுதூர் இடையே கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு தடுப்பணை கட்டுவதன் மூலம் சுற்றுப்புற பகுதிகளில் நீர் மட்டம் உயரும். மின் உற்பத்தியால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதன் மூலம் இந்த பகுதி மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் உயரும். மேலும் மேற்படி இடத்தில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் போது, அம்மாபாளையம் கிராம மக்களின் 100 ஆண்டு கால கோரிக்கையான பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எளிதில் நிறைவேறும். எனவே மாட்ட நிர்வாகம் சார்பில் மேற்கண்ட இடத்தில் ஆய்வு செய்து, எங்களது கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்