ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும்; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை தூர்வார வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளும், அதற்கு அதிகாரிகள் அளித்த பதிலும் வருமாறு:-
வையாபுரி:- நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சரபங்கா செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை சேலம் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்:- சரபங்கா செயற்பொறியாளர் அலுவலகம் இங்கேயே செயல்பட அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
சுந்தரம்:- பயிர் இன்சூரன்ஸ் தொகை ஒரே கிராமத்தில் ஒருசில விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. பெரும்பாலான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே அனைத்து விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும். இதேபோல் விவசாயிகளிடம் இருந்து ஆண்டுக்கு 2½ ஏக்கருக்கு ரூ.500 வீதம் தண்ட தீர்வை வசூல் செய்வதை ரத்துசெய்திட அரசுக்கு பரிந்துரை செய்திட வேண்டும்.
கலெக்டர்:- கம்ப்யூட்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கபெறாமல் உள்ளது. விரைவில் விடுபட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். தண்ட தீர்வையை ரத்து செய்திடவும் அரசுக்கு பரிந்துரை செய்யலாம்.
குப்புதுரை:- இந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் குடிமராமத்து பணியை சரியாக செய்து முடித்துள்ளோம். எனவே இனிவரும் காலங்களில் தூர்வாரும் பணியை விவசாய சங்கங்களுக்கு வழங்கிட வேண்டும்.
இதேபோல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடம் உள்ள பழைய மின்மோட்டார்களை திரும்பபெற்றுக் கொண்டு மானிய விலையில் புதிய மின்மோட்டார் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. மீண்டும் அந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகளும் பயன்பெறுவார்கள். புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின்மோட்டார்கள் பொருத்துவதன் மூலம் மின்சாரத்தையும் மிச்சப்படுத்த முடியும்.
கலெக்டர்:- பரிசீலனை செய்யப்படும்.
ராஜேந்திரன்:- கடந்த சில ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் காய்ந்துபோன தென்னை, மா மற்றும் பாக்கு மரங்களுக்கு உரிய இழப்பீட்டை மாவட்ட நிர்வாகம் பெற்று தரவேண்டும். இதேபோல் மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்கள் தன்னார்வலர்கள் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஏரிகளுக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்களில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்றி நீர்வரத்து கால்வாய்களையும் தூர்வாரினால் ஏரிகளுக்கு தண்ணீர் எளிதில் வந்து தேங்கும்.
இவ்வாறு விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், சப்-கலெக்டர் கிராந்திகுமார், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் உள்பட அனைத்துதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.