அதியமான்கோட்டையில், 17 வயது மாணவியுடன் திருமணம் - போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது

அதியமான்கோட்டை பகுதியில் 17 வயது மாணவியை திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-08-29 22:15 GMT
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி தர்மபுரியில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். மாணவி கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்காவது சென்றாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் அந்த மாணவி சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஓமலூருக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அந்த மாணவி அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருடைய மகன் சக்தியுடன் (வயது 27) இருந்தது தெரியவந்தது. சக்தி டிராக்டர் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். சக்தி அந்த மாணவியை திருமணம் செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை திருமணம் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அந்த மாணவியை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்