ஓசூரில், செல்போன் கீழே விழுந்து விட்டதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.9 லட்சம் பறிப்பு - மர்ம நபர்கள் கைவரிசை
ஓசூரில், செல்போன் கீழே விழுந்து விட்டதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.9 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் பிரவீன்குமார்(வயது 36). இவர் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று பிரவீன்குமார் தனது நிறுவனத்தில் பணிபுரியும் மாதேஷ் என்ற ஊழியரிடம், 10 லட்ச ரூபாய் கொடுத்து அதனை ஒரு தனியார் வங்கியில் செலுத்துமாறு கூறியதாக தெரிகிறது.
அதன்படி அவர், ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு பணத்தை செலுத்த சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மாதேசிடம் உங்கள் செல்போன் கீழே விழுந்து விட்டது எனக்கூறியுள்ளார்.
இதனை நம்பிய மாதேஷ் கீழே குனிந்து பார்த்தார். அப்போது அவர் கையில் இருந்த ரூ.10 லட்சத்தை அந்த மர்ம நபர் பறித்து கொண்டு மோட்டார்சைக்கிளில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் தப்பி சென்றார். அந்த நேரம் 10 லட்சத்தில் இருந்து சில 500 ரூபாய் கட்டுகள் கீழே விழுந்தன. அதில் ரூ.1 லட்சம் இருந்தது. அதனை மாதேஷ் எடுத்து கொண்டார். எனவே, ரூ.9 லட்சத்துடன் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து மாதேஷ் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 9 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.