சங்கரன்கோவில் அருகே 16 வயது பெண்ணுக்கு பிறந்த குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதி - அதிகாரி விசாரணை

சங்கரன்கோவில் அருகே 16 வயது பெண்ணுக்கு பிறந்த குழந்தையை விலைக்கு வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட வெளிமாநில தம்பதியிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-08-29 22:45 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண்ணுக்கு, புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாதர் வல்ராம், கிறிஸ்டி தம்பதியினர் விலை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த குழந்தையை மஞ்சள் காமாலை சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது, கிறிஸ்டியின் வயதை வைத்து இந்த குழந்தை, அவருடைய குழந்தை இல்லை என்று ஆஸ்பத்திரி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் புகார் அளித்தனர். அவர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ்ஆனந்த், தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் குழந்தையை வாங்கியதாக கூறப்படுகின்ற பாதர் வல்ராம், கிறிஸ்டி தம்பதியினரையும், குழந்தையை அவர்களுக்கு வாங்கி கொடுத்த டிரைவர் இம்மானுவேலையும் நெல்லையில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு வரவழைத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ்ஆனந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்