கோவில்பட்டியில் காங்கிரசார் நூதன போராட்டம்
கோவில்பட்டியில் காங்கிரசார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கோவில்பட்டி,
மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் அய்யலுசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு முழங்காலிட்டு தவழ்ந்தவாறும், கழுத்தில் சுவாமிகளின் படங்களை தொங்கவிட்டவாறும் நூதன முறையில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில், தூத்துக்குடி மீளவிட்டான்-கோவில்பட்டி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக, ஓட்டப்பிடாரம் தாலுகா பரிவில்லிக்கோட்டை, கயத்தாறு தாலுகா மும்மலைப்பட்டியில் உள்ள குளங்களில் முறைகேடாக சரள் மண்ணை அள்ளிச் செல்கின்றனர். இதுகுறித்து ஏற்கனவே அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை.
தற்போது கோவில்பட்டி அருகே இடைசெவலில் உள்ள தனியார் நிலத்தில் இருந்தும் முறைகேடாக சரள் மண்ணை லாரிகளில் அள்ளிச் செல்கின்றனர். எனவே சரள் மண் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டத்தில் மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் முத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் மகேஷ்குமார், நகர தலைவர் சண்முகராஜ், ஒன்றிய தலைவர் செல்லத்துரை, வட்டார துணை தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மனுவை பெற்று கொண்ட உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலா, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.