கயத்தாறில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கயத்தாறில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கயத்தாறு,
கயத்தாறு-மதுரை மெயின் ரோடு பழைய பஸ் நிறுத்தம் அருகில் சாலையின் இருபுறமும் கடைகளின் முன்பாக சுமார் 30 அடி தூரம் வரையிலும் ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்தன. இதையடுத்து அங்கு சாலையோர கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து சில கடைகளின் ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்களே அகற்றினர். எனினும் பெரும்பாலான கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
தொடர்ந்து நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோர கடைகளின் முன்புள்ள காங்கிரீட் தளம், மேற்கூரை போன்ற ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி நடந்தது. சாலையின் இருபுறமும் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் சிமெண்டு தள கற்கள் பதிப்பதற்காக, சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது.
இந்த பணிகளை வருவாய் ஆய்வாளர் சுடலைமணி மற்றும் நகர பஞ்சாயத்து அலுவலர்கள் பார்வையிட்டனர். இதற்கிடையே அங்கு சாலையோரம் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாதவாறு, அங்குள்ள மின்கம்பங்களையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.