பாளையங்கோட்டையில் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

பாளையங்கோட்டையில் மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2019-08-29 22:15 GMT
நெல்லை,

நெல்லை மாநகரில் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.300 கோடி செலவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் சேகரிக்கப்படும் கழிவு நீர் அந்தந்த பகுதியில் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ராமையன்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக பாளையங்கோட்டை 11-வது வார்டுக்கு உட்பட்ட திம்மராஜபுரம் மேலூர் பசும்பொன் நகரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நேற்று முன்தினம் இரவு பள்ளம் தோண்டப்பட்டது.

இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று மதியம் அங்குள்ள தேவி காந்தாரி அம்மன் கோவில் அருகில் உள்ள மெயின் ரோட்டில் பொது மக்கள் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக நெல்லை சந்திப்பில் இருந்து மணப்படை வீடு நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அ.தி.மு.க. நிர்வாகிகளும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதே போல் பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகரில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்