மயிலம் அருகே, டேங்கர் லாரிகளில் ஆயில்-டீசல் திருடிய 5 பேர் கைது - உடந்தையாக இருந்த லாரி டிரைவரும் சிக்கினார்
மயிலம் அருகே சாலையோரம் நிறுத்தி டேங்கர் லாரிகளில் ஆயில், டீசல் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருட்டுக்கு உடந்தையாக இருந்த டேங்கர் லாரி டிரைவரும் சிக்கினார்.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று மாலை மயிலம் அடுத்த சின்னநெற்குணம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியில் இருந்து கேனில் ஆயிலை பிடித்துக் கொண்டிருந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தப்பிய ஓடிய 2 பேரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் மயிலம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார்(வயது 43) என்பதும், மற்றொருவர் டேங்கர் லாரியின் டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சாலையனூரை சேர்ந்த மணி மகன் கோவிந்தராஜ்(30) என்பதும், சென்னை துறைமுகத்தில் இருந்து 25 டன் மினரல் ஆயிலை (கழிவு ஆயில்) ஏற்றிக் கொண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள ஒரு தனியார் ஆயில் நிறுவனத்துக்கு கொண்டு செல்லும் வழியில் சாலையோரம் லாரியை நிறுத்தி டிரைவர் உதவியுடன் டேங்கரில் இருந்து ஆயிலை செந்தில் குமார் திருடியது தெரிந்தது.
தொடர்ந்து செந்தில்குமாரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னிகாபுரத்தை சேர்ந்த ஆறுமுகம்(49), சின்னநெற்குணத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்(42), கோதண்டபாணி(63), செண்டூரை சேர்ந்த வீரமுத்து(55) ஆகியோருடன் சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக டிரைவர்கள் உதவியுடன் தனியார் நிறுவனங்களுக்கு டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் ஆயில் மற்றும் டீசலை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார், டிரைவர் கோவிந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் செந்தில்குமார் கொடுத்த தகவலின்பேரில் ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 25 டன் ஆயிலுடன் டேங்கர் லாரி மற்றும் 200 லிட்டர் டீசல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட 5 பேர் மற்றும் திருட்டுக்கு உடந்தையாக இருந்த டேங்கர் லாரி டிரைவரை கைது செய்த மயிலம் போலீசாரை திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெகுவாக பாராட்டினார். டீசல், ஆயில் போன்றவற்றை டேங்கர் லாரிகள் கொண்டு செல்லும்போது டிரைவர்களை சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.