வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியம் தேவியனந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தங்கள் ஊராட்சி பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.
அப்போது கலெக்டர் சுப்பிரமணியனிடம் கிராமமக்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தங்கள் ஊராட்சியில் 2 வருடமாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை. ஏரி, குளம் தூர்வாரும் பணிகளை 2 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வழங்கிவிட்டு மீதி நாட்கள் இயந்திரத்தை கொண்டு பணியினை செய்து கணக்கு காட்டுகின்றனர். மேலும் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்திலும் முறைகேடு நடக்கிறது. இதனை தட்டிக்கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.