திருவெண்ணெய்நல்லூர் அருகே, சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

திருவெண்ணெய்நல்லூர் அருகே சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-29 22:30 GMT
அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமுண்டீச்சரம் கிராமத்தில் பழமைவாய்ந்த சிவலோகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு சாமிக்கு பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோவில் கதவை பூட்டிவிட்டு பூசாரி கண்ணன், தனது வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை பூசாரி கண்ணன் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பிரகாரத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த கோவிலில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.

நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் வயரை துண்டித்தனர். பின்னர் அவர்கள் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. இதில் உண்டியலில் இருந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் 30 ஆயிரத்திற்கு மேல் கொள்ளை போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்