கொடைக்கானல், பழனி வனப்பகுதிகளை, புலிகள் சரணாலயத்துடன் இணைக்க கூடாது

கொடைக்கானல், பழனி வனப்பகுதிகளை ஆனைமலை புலிகள் சரணாலயத்துடன் இணைக்க கூடாது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2019-08-29 22:45 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள், திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது கொடைக்கானல் பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவக்குமார், மலை தோட்ட விவசாயிகள் அணியின் மாநில செயலாளர் அசோகன் மற்றும் கொடைக் கானல் மேல்மலை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு திரண்டு தங்களது கோரிக்கை குறித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கொடைக்கானல் தாலுகாவில் உள்ள வத்தரேவு, மன்னவனூர், பூம்பாறை, பழனி ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளை ஆனைமலை புலிகள் சரணாலயத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருவேளை புலிகள் சரணாலயத்துடன் கொடைக்கானல் வனப்பகுதி இணைக்கப்பட்டு விட்டால் பூம்பாறை, கூக்கால், மன்னவனூர், பூண்டி, வடகவுஞ்சி உள்ளிட்ட வருவாய் கிராமங்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்களில் வசிப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

ஏனென்றால் அந்த கிராமங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். கிராமங்களில் வசிக்கும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெளியேற்றப்பட்டுவிடுவார்கள். எனவே கொடைக்கானல், பழனி வனப்பகுதிகளை ஆனைமலை புலிகள் சரணாலயத்துடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அங்கு வசிப்பவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். விவசாயிகளின் கோரிக்கையை கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதையடுத்து ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த ஒரு விவசாயி, தங்கள் பகுதியில் சுற்றித்திரியும் மயில்கள் விளைபயிர்களை நாசம் செய்துவிடுகின்றன. அவற்றை விரட்ட முடியாமல் தவித்து வருகிறோம். பயிர்கள் நாசமாவதால் விளைச்சலும் பாதிக்கப்படுகிறது என்றனர். வனத்துறை மூலம் மயில்களை பிடித்து வேறு இடத்தில் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

அதன் பின்னர் கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே புறம்போக்கு நிலங்கள் ஏராளமாக உள்ளன. இதனை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளனர். அதேபோல் கொடைக்கானல் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் வரை புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடைக்கானலை சேர்ந்த விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரை தொடர்ந்து, திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி பேசுகையில், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள குளங்கள், கண்மாய்களில் வண்டல் மண்ணை அள்ளிக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் சிலர் அங்கு மண் அள்ளிச்செல்ல வேண்டும் என்றால் தங்களுக்கு பணம் தரவேண்டும் என்று மிரட்டுகின்றனர் என்றார்.

அதற்கு பதிலளித்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர், பணம் கேட்பவர்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படையுங்கள். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். அதே போல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் காட்டுப்பன்றி, யானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது என்று அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்தார். தீவிர ரோந்து பணி மேற்கொண்டு யானைகள், காட்டுப்பன்றிகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். அதையடுத்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்