புதுக்கோட்டை அருகே மாநில துப்பாக்கி சுடும் போட்டி தொடங்கியது

புதுக்கோட்டை அருகே மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று தொடங்கியது. மேலும் அங்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் புதிய கிளப் ஹவுஸ் திறந்து வைக்கப்பட்டது.;

Update:2019-08-30 04:15 IST
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், ‘தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்’ என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆவாரங்குடிபட்டி கிராமத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடத்திய மாநில அளவிலான 45-வது துப்பாக்கி சுடும் போட்டி நேற்று தொடங்கியது.

போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கலந்து கொண்டு, ‘யெஸ்’ என கட்டளை பிறப்பித்ததும் பறந்து சென்ற தட்டுகளை டபுள் டிராப் முறையில் துப்பாக்கியால் குறிபார்த்து தோட்டாவால் சுட்டு தொடங்கி வைத்தார். இதுபோல ஸ்கீட் பிரிவிலும் கட்டளை பிறப்பித்து பறந்து சென்ற தட்டுகளை சுட்டு வீழ்த்தி தொடங்கி வைத்தார். தேசிய வீரரும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவருமான டி.வி.சீதாராமராவ், செயலாளர் ஆர்.ரவிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

3 பிரிவுகளில் போட்டி

துப்பாக்கி சுடும் போட்டியானது சிங்கிள் டிராப், டபுள் டிராப் மற்றும் ஸ்கீட் ஆகிய 3 பிரிவுகளில் நடந்தன. மாநிலம் முழுவதும் இருந்து 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, பறந்து சென்ற தட்டுகளை துப்பாக்கி தோட்டாக்களால் சுட்டு வீழ்த்தினர். இதில் ராஜகோபால தொண்டைமான் டபுள் டிராப் மற்றும் ஸ்கீட் பிரிவில் பறந்து செல்லும் தட்டுகளை குறிபார்த்து சுடுவதில் வல்லவர். அவரும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார். இதுபோல அவரது மகன் பிரித்விராஜ் தொண்டைமான் ஷாட்கன் டிராப் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர். அவரும் போட்டியில் பங்கேற்றார்.

துப்பாக்கி சுடும் போட்டியில் சிங்கிள் டிராப் பிரிவில் சேலத்தை சேர்ந்த பிரமயா என்ற 14 வயது மாணவியும் கலந்து கொண்டு அசத்தினார். இதுபோல ராஜ கோபால தொண்டைமானின் மகள் ராதா நிரஞ்சனாவும் டபுள் டிராப் பிரிவுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று சாதனை நிகழ்த்தினார்.

சிங்கிள் டிராப் பிரிவில் 145, டபுள் டிராப் பிரிவில் 80, ஸ்கீட் பிரிவில் 50 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். துப்பாக்கி சுடுதலில் ‘டபுள் டிராப்’ பிரிவில் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் சர்வதேச வீரரான பிரித்விராஜ் தொண்டைமான் 60 தோட்டாக்களுக்கு 53 தோட்டாக்கள் மூலம் பறக்கும் தட்டை சுட்டு வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். மாலையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து துப்பாக்கி சுடும் போட்டி செப்டம்பர் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு துப்பாக்கி சுடும் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப் படுகிறது. மேலும் ஒவ்வொரு பிரிவு வாரியாக சாதனை படைத்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.

கிளப் ஹவுஸ் திறப்பு

ஆவாரங்குடிபட்டி துப்பாக்கி சுடும் தளத்தில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் புதிய கிளப் ஹவுஸ் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் டி.வி.சீதாராம ராவ், செயலாளர் ரவிசங்கர், தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜகோபால தொண்டைமான், முன்னாள் மேயரும் கிளப்பின் பொருளாளருமான சாருபாலா தொண்டைமான், செயலாளர் பிரித்விராஜ் தொண்டைமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்