குழந்தையை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

குழந்தையை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-08-29 22:15 GMT
செங்கல்பட்டு,

சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவர் அந்த பகுதியில் கட்டிட தொழில் செய்து வந்தார். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (வயது 44), பச்சையம்மாளிடம் வேலை கேட்டுள்ளார். பச்சையம்மாளும் தான் செய்யும் கட்டிடத்தில் வெங்கடேசனுக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளார். வார இறுதியில் மேஸ்திரி வெங்கடேசனுக்கு குறைந்த கூலி கொடுத்துள்ளார்.

பச்சையம்மாள் கமிஷன் வாங்கியதால்தான் தனக்கு குறைந்த கூலி தருவதாக வெங்கடேசனுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் கடந்த 14.12.2010 அன்று இரவு 10 மணியளவில் பச்சையம்மாளின் வீட்டுக்கு சென்ற வெங்கடேசன் அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் 1½ வயது ஆண் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி நின்றுக்கொண்டிருந்த பச்சையம்மாளின் மகள் பானுமதி இவர்களது சண்டையை விலக்க முயன்றார். அப்போது வெங்கடேசன், பச்சையம்மாளை கத்தியால் குத்த முயன்றார். இதில் எதிர்பாராத விதமாக பச்சையம்மாளின் 1½ வயது பேரனான வடிவேல்முருகன் தலையில் குத்தியது.

படுகாயம் அடைந்த அந்த குழந்தை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. கண்ணகி நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து, செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராமநாதன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் வெங்கடேசனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஆனூர் வெங்கடேசன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்